குடிப்பதற்கு பெற்றோர் பணம் தராததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - மதுவில் விஷம் கலந்தும் குடித்தார்
தேனியில் மது குடிக்க பெற்றோர் பணம் கொடுக்காததால், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி பங்களாமேடு சுண்ணாம்பு காளவாசல் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவருடைய மகன் மணிகண்டன் (22). கூலித்தொழிலாளி. இவர், தனது பெற்றோரிடம் மதுகுடிப்பதற்கு அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
பின்னர் மது குடிக்க பணம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரவி தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வீட்டில் மணிகண்டன் ஒரு சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தார்.
உடனே அவரை கீழே இறக்கி உள்ளனர். அப்போது அவருக்கு உயிர் இருந்துள்ளது. அவர் தனது பெற்றோரிடம், தான் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாகவும், அதில் சாவதற்கு தாமதம் ஆகும் என்பதால் தூக்கில் தொங்கியதாகவும் கூறியுள்ளார். உடனே அவரை பெற்றோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை ரவி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story