கரூரில் கடைகள்-வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் காலாவதியான உணவு பொருட்கள்-குளிர்பானங்களும் சிக்கின


கரூரில் கடைகள்-வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் காலாவதியான உணவு பொருட்கள்-குளிர்பானங்களும் சிக்கின
x
தினத்தந்தி 10 May 2019 9:30 PM GMT (Updated: 10 May 2019 10:07 PM GMT)

கரூர் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர், 

கரூர் நகர பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பரவலாக இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா உள்பட அதிகாரிகள் அடங்கிய 7 குழுவினர் நேற்று கரூர் நகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கரூர் பஸ் நிலையம், தெற்கு-வடக்கு முருகானந்தபுரம், ஜவகர்பஜார், காமராஜ் மார்க்கெட், ரத்தினம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்களில் அவர்கள் சோதனையிட்டனர்.

அப்போது அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். முருகானந்தபுரத்தில் பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் ஒரு கடையின் குடோனில் பிளாஸ்டிக் கப்புகள், சாப்பாடு தட்டுகள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அந்த கடை நிர்வாகத்தினரை அழைத்த அதிகாரிகள், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,200 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாத வகையில் உணவு பொருட்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கரூர் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு கடையில் இருந்து 20 கிலோ எடை கொண்ட காலாவதியான இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தவிர காலாவதியான 30 லிட்டர் குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதை விற்பனை செய்தவர்களுக்கு ரூ.56 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பழக்கடைகள், குடோன்களில் கார்பைடு என்கிற ரசாயனக்கல் மூலம் பழங்கள் இயற்கைக்கு புறம்பாக பழுக்க வைக்கப்படுகிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story