திருவாரூர் மாவட்டத்தில், லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3,200 லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் மூலமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரெயிலில் அனுப்புவதற்காக ரெயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களுடைய அரவை பணிக்கான நெல் மூட்டைகளை தங்களுடைய சொந்த லாரிகளில் ஏற்றி கொள்வதாக கூறி பழைய நடைமுறையை மாற்றி உள்ளனர்.
இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளில் நெல் மூட்டைகளை சுமை ஏற்றும் புதிய நடைமுறையை கைவிடக்கோரியும், பழைய நடைமுறையில் நெல் மூட்டைகளை அனுப்பி வைக்கும் பணியை செயல்படுத்த வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3,200 லாரிகள் ஓடவில்லை. இந்த நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் லாரிகளில் நெல் மூட்டைகளை சுமை ஏற்றுவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே லாரி உரிமையாளர்களுடன், உதவி கலெக்டர் முருகதாஸ் தலைமையில் நடந்த பேச்சவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
Related Tags :
Next Story