நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். அதேபோல இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செடில் உற்சவம்

தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. இதில் நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, ரத காவடி, பாடை காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாவையொட்டி நாகை பகுதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். அதைதொடர்ந்து 17-ந் தேதி புஷ்ப பல்லக்கு வீதி உலாவும், 19-ந் தேதி உதிர்வாய் துடைப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

Next Story