ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ரோபோ உதவியுடன் சிறுமிக்கு பித்தநீர்க்கட்டி அகற்றம்
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ரோபோ உதவியுடன் ஆபரேசன் செய்து பித்தநீர்க்கட்டி அகற்றப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வயிற்று வலியால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த 12 வயது சிறுமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். பித்தப்பையில் இருந்த பித்தநீர்க்கட்டியால் தான் அந்த சிறுமி அவதிப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த பித்தநீர் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மயக்கவியல் துறை டாக்டர் சந்தீப் மிஸ்ரா தலைமையில் டாக்டர் நவீன் மற்றும் குழந்தைநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் பிபேகானந்த் ஜின்டால் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை டாக்டர் கலையரசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ரோபோ உதவியுடன் ஆபரேசன் செய்து சிறுமியின் பித்தநீர் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த பித்தநீர்க்கட்டி என்பது பித்தநாளத்தில் பித்தநீர் குழாயில் தோன்று பித்தப்பையில் சிதைவை ஏற்படுத்தும். இந்த பித்த நாளம் கல்லீரலில் இருந்து பித்தநீரை வடித்து குடலுக்கு அனுப்புகிறது. வழக்கமாக இதுபோன்ற நோயாளிகளுக்கு வயிற்றை கிழித்து பெரிய அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்படுவது வழக்கம்.
இதற்கு இந்த சிகிச்சைக்காக நோயாளி நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கவேண்டும். அதிக வலியால் அவதிப்படவும் நேரிடும். அத்துடன் ஆபரேசன் செய்த வயிற்றுப்பகுதியில் பெரிய வடு காணப்படும். ஆனால் ரோபோட்டிக்கின் உதவியுடன் செய்யப்படும் ஆபரேசனுக்காக நோயாளி மருத்துவமனையில் குறுகிய காலம் இருந்தால் போதும். வலியும் அதிகம் இருக்காது. வயிற்றுப்பகுதியில் எந்த வடுவும் இருக்காது.
ரோபோ உதவியுடன் செய்யப்பட்ட இந்த சிகிச்சைக்கு பிறகு 5–வது நாள் சிறுமி நடக்கிறாள். இத்தகைய ஆபரேசன் தென்னிந்தியாவில் ஜிப்மர் மருத்துவமனையில் முதன் முதலாக வெற்றிகரமாக செய்து அகற்றப்பட்டுள்ளது.
சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறுவை சிகிச்சை துறை தலைவர் பிபேகானந்த் ஜின்டால், ரோபோடிக் அறுவை சிகிச்சை பிரிவின் அதிகாரி டாக்டர் துரைராஜன் ஆகியோர் கூறும்போது, ‘ஜிப்மரில் இதுவரை 350 நோயாளிகளுக்கும் மற்றும் 45 குழந்தை நோயாளிகளுக்கும் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே ரோபோ உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளை விட ஜிப்மரில் மிக குறைந்த கட்டணத்தில் இந்த சிகிச்சைகள் செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்தனர்.