ரெட்டியார்சத்திரம் அருகே, தனியார் தார் தொழிற்சாலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு


ரெட்டியார்சத்திரம் அருகே, தனியார் தார் தொழிற்சாலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 11:24 PM GMT)

ரெட்டியார்சத்திரம் அருகே தனியார் தார் தொழிற்சாலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் தனியார் தார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அந்த தொழிற்சாலை செயல்பட எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் அந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தார் தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க அனுமதி கேட்டு நிர்வாகத்தினர் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு தொடர்ந்து தார் தொழிற்சாலை செயல்பட அனுமதி வழங்கியது.

இதனால் நேற்று தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படியே தொழிற்சாலை செயல்பட தொடங்கியுள்ளது. எனவே தேவையின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் முற்றுகையிடும் முயற்சியை கைவிட்டு சென்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story