தேனி கலெக்டர் அலுவலகத்தில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி


தேனி கலெக்டர் அலுவலகத்தில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 6:02 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சி வகுப்பில் அவர் பேசியதாவது:-

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், எந்த மேஜையில் பணியாற்றிட வேண்டும் என்பது குறித்த விவரம் வருகிற 23-ந்தேதி காலை 5 மணி அளவில் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் எந்த மேஜையில் எந்த வாக்கு பதிவு எந்திரங்கள் எண்ணப்பட வேண்டும் என்பது குறித்தும் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

எனவே வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் அன்றைய தினம் காலை 6 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கூடத்துக்கு வருகை தரவேண்டும். வாக்கு எண்ணிக்கையின் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தபால் வாக்கு சீட்டு எண்ணிக்கை தொடங்கிய ½ மணி நேரம் கழித்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாளன்று காலையில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும்.

அங்கிருந்து வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு எந்திரங்கள் கொண்டு வரப்படுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். ஒரு சுற்றுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டவுடன், பாதுகாப்பு அறை பூட்டப்படும். வாக்குப்பதிவை உறுதி செய்யும் 5 எந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து எண்ண வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிற அலுவலர்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது. மேஜையின் மீது ஒவ்வொரு சுற்று வாரியாக வழங்கப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் வாக்குச்சாவடி எண் மற்றும் விவரங்கள் அடங்கிய தாள் வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையின் போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டது தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் பச்சை நிற அட்டையில் உள்ள எண்ணை 17-சி விண்ணப்பத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கைக்கான பொத்தானை அழுத்தியவுடன், முகவர்கள் காணும் வகையில் கட்டுப்பாட்டு கருவியை வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை கார்பன் தாள் வைத்து 2-பிரதிகள் தயாரித்து, அதில் முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை குறிக்கப்பட்ட 2-பிரதிகளையும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கிட வேண்டும். உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை பிரதி எடுத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் சந்தேகம் எழும்பட்சத்தில் அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு 22-ந்தேதி எந்த சட்டமன்ற தொகுதியில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான ஆணையும், 23-ந்தேதியன்று காலையில் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையின் விபரமும் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உதவித்திட்ட அலுவலர் தண்டபாணி, ஆண்டிப்பட்டி தாசில்தார் பாலசண்முகம் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story