தேனூர் அய்யனார் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தேனூர் அய்யனார் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 8:00 PM GMT)

தேனூர் அய்யனார் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யனார், கருப்பையா, பழனியாண்டவர் ஆகிய சாமிகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இரவு வீதிஉலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க சாமிகள் திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கை யுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடிநின்று அர்ச்சனை செய்தனர். பின்னர் இரவு தேர் அதன் நிலையை அடைந்தது. தேரில் கருப்பையா, அய்யனார் மற்றும் பழனியாண்டவர் ஆகிய சுவாமிகள் 3 தேர்களில் வலம் வர கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை குன்னம் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story