மானாமதுரை நாட்டார் ஓடையில் தொடரும் மணல் திருட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


மானாமதுரை நாட்டார் ஓடையில் தொடரும் மணல் திருட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 14 May 2019 10:00 PM GMT)

மானாமதுரை நாட்டார் ஓடையில் தொடரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே நாட்டார் ஓடையில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை வைகை ஆற்றில் மண்வளம் வெகுவாக குறைந்ததையடுத்து, மணல் திருட்டு கும்பல் கண்மாய்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ள ஆரம்பித்துள்ளது. கண்மாய், ஊருணிகளில் 5 அடி ஆழம் வரை சவுடு மண்ணும் அதற்கு கீழே ஆற்று மணலும் தாராளமாக கிடைத்து வருகிறது.

எனவே மணல் திருட்டு கும்பல் கண்மாய்களில் மண்ணை தொடர்ந்து திருட்டுத்தனமாக அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். உள்ளுர் அதிகாரிகள் ஆதரவுடன் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. மிளகனூர் கண்மாயில் இருந்து நாட்டார் ஓடை தீயனூர், ராஜாக்கள் குடியிருப்பு, கரிசல்குளம் வழியாக செல்கிறது.

இதில் தீயனூர் அருகே மானாமதுரை, அருப்புக்கோட்டை அகல ரெயில் பாதை வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் லாரிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனால் நாட்டார் ஓடை முழுவதும் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி வருகிறது. மணல் திருட்டு குறித்து தகவல் கொடுப்பவர்களை, அதிகாரிகள் மணல் திருட்டு கும்பலிடம் சொல்வதால் பலர் அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில் மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் பற்றிய விவரங்கள், மணல் திருட்டு கும்பலுக்கு தெரிந்ததும், அந்த கும்பல் வீடு தேடி சென்று அவரை கொலை மிரட்டல் விடுத்தது. எனவே மானாமதுரை சுற்றுவட்டார கண்மாய்களில் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story