தினத்தந்தி செய்தி எதிரொலி: ஏலகிரிமலையில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி
வேலூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
ஜோலார்பேட்டை,
தற்போது கோடைகாலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
இங்கு காட்டு விலங்குகளான மான், குரங்கு, கரடி, மயில், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குள் உள்ளது. கோடை காலம் என்பதால் மலைப்பகுதியில் நீரின்றி குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் சில விலங்குகள் தண்ணீர் குடிக்க சாலையோரம் வரும்போது வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கிறது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதை கண்ட ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் மற்றும் ஏலகிரிமலை சுற்றுப்பகுதியில் உள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து தங்களது சொந்த பணத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை போக்க மலையடிவாரத்தில் இருந்து மலை சாலைகளில் 15 இடங்களில் புதிதாக பெரிய தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் விடும் நிகழ்ச்சி ஏலகிரிமலை அடிவாரத்தில் நடந்தது.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் சமூக ஆர்வலர் சக்கரவர்த்தி, அகில இந்திய ஊழல் தடுப்பு அமைப்பின் நிர்வாகி சக்கரவர்த்தி ஆகியோர் மினிலாரி மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பினர்.