வெள்ளகோவிலில் 500 ஆண்டு பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு


வெள்ளகோவிலில் 500 ஆண்டு பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 16 May 2019 4:30 AM IST (Updated: 16 May 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் 500 ஆண்டு பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

வீரத்தின் விளைநிலம் தமிழ்மண். ஊர் திரண்டு வந்தாலும், ஒட்டுமொத்த வன விலங்குகளும் படை எடுத்தாலும் தனியாக நின்று எதிர்த்து வீரசமர் புரிவதே பெருமையாக கருதியுள்ளனர் வீரத்தமிழர்கள். அந்த சமரில் மடிவதை பெரும்பேராக நினைத்துள்ளனர். அதுமட்டுமல்ல உழவுத்தொழிலை உவகை கொள்ளும் உன்னத தொழிலாக போற்றியவர்கள் தமிழர்கள். இதற்காக மண்ணையும், இயற்கையையும் வணங்கும் வகையில் வாழ்க்கை முறை அமைத்து இருப்பது போற்றுதலுக்குரியது. மண்ணையும், பெண்ணையும் தாய்க்கு இணையாக போற்றுவது சாலச்சிறந்தது.

அதனால்தான் பண்பாட்டின் ஆணி வேராக பழந்தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். உழுவதை காட்டிலும் இயற்கை உரம் இடுதல் நல்லது களை எடுப்பதும் நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது. அவற்றை விட நன்மைபயப்பது அந்த பயிரை பேணிப்பாதுகாப்பது. பழந்தமிழ் மக்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நானிலம் போற்றும் வகையில் வேளாண்மை மேற்கொண்டதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில், மேட்டு நிலத்தில் பெரிய சிவந்த தினை பயிர் தழைத்து வளர்ந்து இருந்ததையும், அதன் மேல்நோக்கி உயர்ந்து வளைந்த பெரிய கதிர்களை தின்னுவதற்கு காட்டுப்பன்றி வருவதையும், பயிர்களை காப்பாற்ற பன்றி வருகின்ற வழி நோக்கி வீரமறவன் அதனை ஓட்டுவதற்கு காவற்பரண் அமைத்து அதன்மீது நீண்ட சுடராகிய விளக்கினை கொளுத்தி காவல்புரிந்தமையையும் பதிவு செய்துள்ளது.

அவ்வாறு பயிர்களுக்கு சேதம் விளைவிக்க கூடிய காட்டு பன்றிகளை வீரர்கள் விரட்டும் போது அவை அஞ்சாது வீரமறவர்களை எதிர்த்து நிற்கும். காட்டுப்பன்றிகளை எதிர்ப்பது சாதாரண விசயமல்ல. அதுவும் தனியாக வரும் காட்டுப்பன்றிகள் காட்டெருமை போன்று பெரியதாக இருக்கும். அப்போது அதன் முகத்தை கொண்டு ஓங்கி மனிதனை அறைந்தால் மனிதன் எலும்புகள் நொறுங்கிப்போகும். அத்தகையை பன்றிகளை எதிர்த்து போரிட்டு கொல்வது என்பது பலம் பொருந்திய வீரனால் மட்டுமே முடியும். வேளாண்மை பயிர்களை காப்பதற்காக பன்றிகளுடன் போரிட்டு அவற்றைக் குத்தி கொன்று அந்த வீரச்சமரில் தன் இன்னுயிரையும் ஈத்த மாவீரர் நினைவாக எடுக்கப்பட்ட வீர நடுகற்கள் பன்றி குத்திப்பட்டான் நடுகல் என அழைக்கப்படுகின்றன.

திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, பேராசிரியர் சா.மு. ரமேஷ்குமார், ரா.செந்தில்குமார் மற்றும் சு.வேலுசாமி ஆகியோர் வெள்ளக்கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொடிகளும், செடிகளும் சூழ, மண் மேவி இருந்த நடுகல்லை சுத்தம் செய்து பார்த்த போது அந்த வீர நடுகல் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் என தெரியவந்தது.

இந்த நடுகல் குறித்து சு.ரவிக்குமார் கூறியதாவது:–

வீரமறவர்களின் வீரத்தால் விளைநிலங்களை மட்டுமல்ல வேளாண்மையின் அச்சாணியாக விளங்கிய பயிர்களையும் கண்போல் காத்து வந்துள்ளனர். இப்பயிர்களுக்கு பெருத்த அழிவுகளை ஏற்படுத்த கூடிய வலிமைமிக்க காட்டு பன்றிகளை கொல்வது சிரமமான செயலாகும். காட்டுப்பன்றியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் பண்டைய தமிழ் மக்கள் நடுகற்கள் எடுத்து அவற்றை போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

இந்த வீரநடுகல் 145 செ.மீ. உயரமும், 85 செ.மீ அகலமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலது புறம் திரும்பிய நிலையிலும், நன்கு அலங்கரிக்கப்பட்ட சிகை அலங்காரத்துடனும், வளர்ந்து தொங்கும் காதில் குண்டலமும் மேற்கையில் கடகவளையும், கை மணிக்கட்டில் வீர காப்பும், கழுத்தில் சரப்பளி அணிகலனும், மார்பில் வீரத்திற்கு அடையாளமாக சன்ன வீரமும், இடையில் குறுவாளை வைப்பதற்கான உறையுடன் கூடிய மிக நல்ல வேலைப்பாடுடன் கூடிய ஆடையும் அணிந்து மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

மாவீரன் தனது இடது கையில் கயிற்றுடன் கூடிய ஒரு கூர்மையான ஆயுதத்தின் மூலம் காட்டுப்பன்றியின் வாய்ப்பகுதியை குத்தி அப்பன்றி தன் வாயை திறக்க முடியாத வண்ணம் கயிற்றின் மூலம் இறுக்கியுள்ளார். தன் வலது கையில் உள்ள வீரவாள் மூலம் பன்றியின் கழுத்து பகுதியை குத்தி அந்த வீரவாள் பன்றியின் கழுத்துக்கு வெளியே வரும்படி இந்த வீர நடுகல்லை சிற்பி வடிவமைத்துள்ளார்.

இந்த வீர நடுகல்லின் மற்றும் ஒரு சிறப்பம்சமாக வீரன் பன்றியுடன் போரிடும் பொழுது வீரனுடைய நன்றியுள்ள வீரநாய் மாவீரனுக்கு உதவியாக பன்றியின் இடது பின்னங் காலை தாக்குகின்றது. இந்த நடுகல்லில் எழுத்துகள் ஏதும் இல்லாததால் சிலை அமைப்பை வைத்து பார்க்கும் போது இந்த நடுகல் கி.பி. 16 –ம் நூற்றாண்டை சேர்ந்தது எனத் தெரிய வருகின்றது.

இவ்வீரநடுகல் மூலமாக மக்களுக்குத் துன்பத்தை தரக்கூடிய பன்றியைக் கொன்று அந்த வீரச் செயலின் போது தன் இன்னுயிரையும் ஈத்த மாவீரன் மற்றும் அவரது நாயின் நினைவாக நடுகல் எழுப்பிச் சிறப்பிக்கப்பட்டு இருப்பதும் பண்டைய தமிழ் மக்கள் தங்களை அழிவிலிருந்து காப்பாற்றுபவப் போற்றி வணங்கும் இயல்புடையவராய் இருந்துள்ளனர். பன்றியை குத்திக்கொன்று வேளாண்மையை காத்ததால் பன்றி குத்தப்பட்டான் நடுகல் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story