இந்து தீவிரவாதி என சர்ச்சை பேச்சு, கொடைக்கானலில் வக்கீல்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
இந்து தீவிரவாதி என சர்ச்சையாக பேசியது தொடர்பாக கொடைக்கானலில் வக்கீல்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
கொடைக்கானல்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் பல்வேறு பகுதிகளில் அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. கமல்ஹாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் வந்து தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களாக அவர் அங்கேயே தங்கியிருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை.
வழக்கை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அவர் வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தீவிர ஆலோசனைக்கு பிறகு அவர் நேற்று காலை கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே கமல்ஹாசனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர் தங்கியிருந்த ஓட்டல் மற்றும் நகர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story