பாபநாசம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர் மீட்பு


பாபநாசம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர் மீட்பு
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 4:49 PM GMT)

பாபநாசம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர், கும்பகோணம் உதவி கலெக்டர் அதிரடி நடவடிக்கையின் பேரில் மீட்கப்பட்டனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள தேவன்குடி கிராமத்தில் கடலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 20 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக கும்பகோணம் உதவி கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இந்த புகார்களை தொடர்ந்து கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி தலைமையில் பாபநாசம் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சுளா, ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.


அப்போது அங்குள்ள செங்கல் சூளைகளில் 19 ஆண்கள், 20 பெண்கள், 5 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் விடுதலை பத்திரங்களை கும்பகோணம் ஆர்.டி.ஓ.வீராசாமி வழங்கினார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தமிழக அரசின் சார்பில் தலா 20 ஆயிரம் வீதம் நிவாரண உதவிகள் மீட்கப்பட்ட 50 பேருக்கும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, அவர்கள் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி கொடுமைப்படுத்திய சம்மந்தப்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story