அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:01 PM GMT)

அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப் படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த் துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி கீழ்நாங்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையை அகரகடம்பனூர், கீழ்நாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர், வெளியூருக்கு எடுத்து செல்வதற்கும் இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நாங்குடி மெயின் சாலைக்கு வந்து, அங்கிருந்து பஸ் ஏறி கீழ்வேளூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாங்குடி மெயின் சாலையில் இருந்து கீழ்நாங்குடி பகுதிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை எவ்வித பராமரிப்பு இன்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைக்க வேண்டும்

சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story