புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 8:27 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டையம்பாளையம் கிராமம். இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஊராட்சி மூலம் பவானி ஆற்று தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலைத்தொட்டியில் ஏற்று பொது குழாய் வழியாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் கிராமமக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கொண்டையம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 50 பெண்கள் உள்பட சுமார் 60 பேர் வண்டிபாளையம்பிரிவு என்ற இடத்துக்கு சென்று, அங்கு செல்லும் காவிலிபாளையம்–நம்பியூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கிராமமக்கள், 4 நாட்களாக தண்ணீர் வினியோகிக்கவில்லை. கொளுத்தும் வெயிலில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் வாடுகிறோம் என்றார்கள். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி, குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் நடைபெறுவால் ஆற்று தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. இன்று மாலை 2 லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து கொண்டையம்பாளையத்தில் வினியோகிக்கப்படும். நாளைக்குள் குழாயில் பழுதும் சரிசெய்யப்பட்டு ஆற்று தண்ணீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள். எனினும் காலை 10 மணி வரை அந்த ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story