விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை கண்டித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - செம்பனார்கோவில் அருகே நடந்தது


விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை கண்டித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - செம்பனார்கோவில் அருகே நடந்தது
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் பொக்லின் எந்திரங்களை கொண்டு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், விளைநிலத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்த பகுதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழாய்கள் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உமையாள்புரம் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள முடிகண்டநல்லூரில் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவன பணியாளர்கள் வந்தனர். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள், குழாய்கள் பதிக்கும் பணியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நிலம் நீர் அமைப்பின் மாவட்ட செயலாளர் விஷ்ணுகுமார் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள், விளைநிலங்களை பாழாக்கும் ராட்சத குழாய்களை பதிக்கும் பணியை உடனே கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் கெயில் நிறுவன பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் கிராம மக்கள், குழாய்கள் பதிக்கும் பணிக்கு எதிராக கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை உடனே நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திலும், செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கிராம தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மயிலாடுதுறை மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பொது அமைதிக்கு எதிராக கூட்டம் கூடுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக நிலம், நீர் பாதுகாப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இரணியன், மாவட்ட நிர்வாகிகள் விஷ்ணுகுமார், பாலன் உள்பட 8 பேர் மீது செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story