விருத்தாசலத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின் விளக்குகள்


விருத்தாசலத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின் விளக்குகள்
x
தினத்தந்தி 19 May 2019 10:15 PM GMT (Updated: 19 May 2019 7:23 PM GMT)

விருத்தாசலத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின் விளக்குகளை டி.ஐ.ஜி.சந்தோஷ்குமார் இயக்கி வைத்தார்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் உள்ள சேலம் புறவழிச்சாலையில் தினந்தோறும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் எப்போதுமே போக்குவரத்து அதிகமாக காணப்படும். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஒளிரும் மின்விளக்குகள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படாத காரணத்தால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்க்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து கடலூர் பிரிவு சாலை, பொன்னேரி ரவுண்டானா, சித்தலூர், மணவாளநல்லூர் ஆகிய பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் எல்.இ.டி. ஒளிரும் மின் விளக்குகள், சிவப்பு வண்ண பிரதிபலிப்பான்கள், தடுப்பு கட்டைகள், ஒளிரும் தன்மையுடைய விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மணவாளநல்லூரில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகளையும், ஒளிரும் மின்விளக்குகளையும் இயக்கி வைத்தார்.

இதில் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சாகுல் ஹமீது, ஞானவேல், அரசு வக்கீல் விஜயகுமார், வக்கீல் அருள்குமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story