கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி சாவு தற்கொலைக்கு தூண்டியதாக அத்தை கைது


கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி சாவு தற்கொலைக்கு தூண்டியதாக அத்தை கைது
x
தினத்தந்தி 19 May 2019 10:15 PM GMT (Updated: 19 May 2019 9:11 PM GMT)

ஆத்தூர் அருகே அத்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் அத்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலையம்பட்டி புதூர் கிராமம் வடக்கு காடு பகுதியில் வசித்து வருபவர் சடையன், விவசாயி. இவருடைய மனைவி பாப்பாத்தி அம்மாள். இவர்களுக்கு முருகேசன் என்ற மகனும், மலர்க்கொடி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் முருகேசன், தனது மனைவி ரேவதியுடன் தந்தை வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில் முருகேசன் இறந்து விட்டார். அதன்பிறகு ரேவதி தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.

சடையனின் மகள் மலர்க்கொடி தனது கணவர் செல்வத்துடன் அதே ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் மலர்க்கொடியும், அவரது கணவர் செல்வமும் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர்களின் 2 மகன்கள், 2 மகள்கள் என 4 பேரையும் தாய் வழி தாத்தாவான சடையன் வளர்த்து வந்தார். இவர்களில் இளைய பேத்தியான விஸ்வா (வயது 19) ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், சடையனின் வீட்டில் வசித்து வரும் அத்தை ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க ரேவதியும், மாணவி விஸ்வாவும் சென்றனர். அப்போது ரேவதி, விஸ்வாவை ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி விஸ்வா, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து சடையன் மல்லியக்கரை போலீசில் புகார் செய்தார். அதில் தனது பேத்தி தற்கொலைக்கு மருமகள் ரேவதி தான் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ரேவதி மீது சப்-இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி ரேவதியை போலீசார் கைது செய்தனர்.

அத்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story