பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தேனி, கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
கம்பம்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தேனியில் உள்ள தபால் நிலையம் முன்பு நடந்தது.
இதற்காக தேனியில் பெரியகுளம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் இருந்து தபால் நிலையம் வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், தேனி நகர செயலாளர் ஈஸ்வரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட தபால் அட்டைகளில், கவர்னருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. நகர செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கல்யாண சுந்தரம், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன், நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் தங்கபாண்டி, ஆதி தமிழர் பேரவை நகர செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிறுபான்மை நலக் குழு பொறுப்பாளர் அக்பர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story