விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் வங்கியில் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை உரிமையாளர், நிர்வாகிகள் மீது நடவடிக்கை


விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் வங்கியில் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை உரிமையாளர், நிர்வாகிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 7:11 PM GMT)

விவசாயி பெயரில் அவருக்கு தெரியாமல் ரூ.23 லட்சம் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அரசலாற்று படுகையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கரும்பு விவசாயி. இவர் நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் 1 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து திருமண்டங்குடியில் இயங்கி வந்த தனியார் சக்கரை ஆலைக்கு கரும்பை வெட்டி அனுப்பி வந்தேன். இந்த நிலையில் கும்பகோணத்தில் இயங்கி வரும் ஒரு வங்கியில் நான் ரூ.23 லட்சம் கடன் பெற்று இருப்பதாகவும், அதற்கு வட்டி, அசலும் சேர்த்து ரூ.28 லட்சத்து 44 ஆயிரத்து 607 செலுத்த வேண்டும் என வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டது.

அதன் பின்னர் வேறு யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் வழக்கமான எனது சொந்த பணியில் ஈடுபட்டு இருந்தேன். இந்த நிலையில் மீண்டும் வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில் அசல், வட்டி ரூ.34 லட்சத்து 70 ஆயிரம் செ லுத்த வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து வங்கியில் கேட்ட போது நானும், 213 விவசாயிகளும் வங்கியில் கடன் பெற்று இருப்பதாக பெயர் பட்டியலை கொடுத்தனர். எனது பெயரில் எனக்கு தெரியாமல் சர்க்கரை ஆலை உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதே போல் நானும் மற்ற விவசாயிகளும் ஆலைக்கு கரும்பு பதிவு செய்து வெட்டி அனுப்பினோம். ஆலை விவசாயிகளிடம் சட்டப்படி தனித்தனியாக ஒப்பந்தம் செய்துள்ளோம். மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலையை 14 நாட்களுக்குள் தர வேண்டும் என்பது சட்டம். ஆனால் 1 ஆண்டுக்கு மேலாகியும் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இது தொடர்பாகவும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து கரும்புக்கான பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story