வங்கி ஊழியர் கொலை- நகைகள் மாயம் வழக்குகளில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்


வங்கி ஊழியர் கொலை- நகைகள் மாயம் வழக்குகளில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 8:38 PM GMT)

வங்கி ஊழியர் கொலை மற்றும் வங்கியில் நகைகள் மாயமான வழக்குகளில் குற்றவாளிகள் பற்றிய துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாரிமுத்து என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி இவரை காணவில்லை என்று அவருடைய மனைவி ராணி, கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே வல்லத்திராக்கோட்டையில் மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்டு கிடந்தது. கோடியக்கரை கடல் பகுதியில் உடல் அழுகிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.

இதையடுத்து வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன், டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும், அதன் மதிப்பு ரூ.4 கோடியே 84 லட்சம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கையாடல் செய்து கவரிங் நகைகளை வைத்து விட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்று, பின்னர் மீண்டும் அந்த நகைகளை மீட்டு விற்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இந்நிலையில் பிரேத பரிசோதனையில், மாரிமுத்துவின் கழுத்து எலும்பு, விலா எலும்பு ஆகியவை முறிந்த நிலையில் உள்ளதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வங்கி அதிகாரிகள், மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவருடைய உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், வங்கியில் இருந்து எடுத்த நகைகளை மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள பிற வங்கிகள், அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தனது பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள், நகை அடகு கடைகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புதுக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள், வங்கியில் இருந்து மாயமான நகைகள் என்பது தெரியவந்தது. இந்த நகைகள் யார், யார் பெயரில் அடகு வைக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்களை சேகரித்த போலீசார் அவரிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

நிதி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

தொடர்ந்து போலீசார் மற்ற வங்கிகள் மற்றும் நகை அடகு கடைகளில் திருடிய நகைகளை அடகு வைத்து உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தனியார் நிதி நிறுவனங்களில் வைக்கப்பட்டு உள்ள நகைகள் குறித்த விவரங்களை தருமாறு சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிதி நிறுவனங்கள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்தான் நகைகளை அடகு வைத்தது யார் என்பது தெரியவரும். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். விசாரணையின் முடிவில் தான் இந்த வழக்கில் யார், யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது தெரியவரும். இதுவரை எந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்படவில்லை.

போலீசார் திணறல்

வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் இதுவரை போலீசாருக்கு எந்த ஒரு ஆவணங்களும் கிடைக்கவில்லை. மேலும் வங்கியில் நகைகள் மாயமான வழக்கை டவுன் போலீசாரும், மாரிமுத்து மாயமான வழக்கை கணேஷ்நகர் போலீசாரும், மாரிமுத்துவின் பிணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். 

Next Story