தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை, முக்கிய ஆவணங்கள் சிக்கின - செல்போன்கள்-லேப்டாப்கள் பறிமுதல்


தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை, முக்கிய ஆவணங்கள் சிக்கின - செல்போன்கள்-லேப்டாப்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 7:37 PM GMT)

ராமநாதபுரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீர மரணம் எங்கள் இலக்கு என்ற பெயரில் செயல்பட்ட வாட்ஸ்-அப் கும்பல் மீது வழக்குபதிவு செய்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, தேவிபட்டினம் ஆகிய பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கடலூர் லால்பேட்டை, சேலம் உள்பட 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அதிகாலை 3 மணி முதல் தொடங்கி சில இடங்களில் நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் 3 லேப்டாப், 3 முக்கிய தகவல்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க், 16 செல்போன், 8 சிம்கார்டு, 2 பென் டிரைவ், 5 மெமரி கார்டு, ஒரு கார்டு ரீடர், 2 கத்திகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், இதில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story