தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: திருச்சியில் போலீஸ் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி 83 பேர் கைது


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: திருச்சியில் போலீஸ் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி 83 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 8:30 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திருச்சியில் போலீஸ் தடையை மீறி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 83 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலாமாண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் தேர்தல் ஆணைய விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த மண்டல செயலாளர் செழியன் தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று காலை மத்திய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

83 பேர் கைது

அஞ்சலியை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தியும், பலியானவர்களுக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 19 பெண்கள் உள்பட மொத்தம் 83 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story