போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை, மேலும் 2 பேரை வெட்டி விட்டு தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு


போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை, மேலும் 2 பேரை வெட்டி விட்டு தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 May 2019 10:00 PM GMT (Updated: 22 May 2019 10:53 PM GMT)

சிவகங்கை போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த மேலபிடவூர் கிராமத்தை சேர்ந்தவர், புவனேசுவரன் என்ற ஈசுவரன் (வயது 21). கடந்த மாதம் இவரது தரப்பினருக்கும், சிவகங்கையை அடுத்த வேலங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பிரியதர்ஷன் கத்தியால் குத்தப்பட்டார்.

இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மேலபிடவூரை சேர்ந்த புவனேசுவரன், அஜீத், அருண்குமார், அஜய்முருகன், சூரியா, கார்த்திக் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். அதில் அஜய்முருகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரும் முன்ஜாமீன் பெற்றனர். அவர்களுக்கு சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர்கள் 5 பேரும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தனர். நேற்று புவனேசுவரன், கார்த்திக், சூரியா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்று கொண்டிருந்தனர்.

மறக்குளம் பகுதியில் அவர்கள் சென்ற போது, பிரியதர்ஷன் உள்பட ஒரு கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிறுத்தியது. மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் சுதாரித்து தப்புவதற்குள் அவர்களை வெட்டியதாக தெரிகிறது. 3 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பகுதியில் வயல் வழியாக ஓடினர்.

ஆனாலும், புவனேசுவரனை பின்தொடர்ந்து சென்ற அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை மேலும் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேரும் காயங்களுடன் தப்பினார்கள்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், உறவினர்களும் அங்கு குவிந்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி, புவனேசுவரன் உடலை எடுக்க விடாமல் அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, புவனேசுவரன் உடலை எடுக்க அவருடைய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் புவனேசுவரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 பேர் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story