திண்டுக்கல்லில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை


திண்டுக்கல்லில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 7:25 PM GMT)

திண்டுக்கல்லில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து நேற்று வரை 1 மாத காலத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள், நிருபர்கள் உள்பட அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் பார்வையாளர்கள் உள்பட மற்ற அனைவரும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தொடர்பு கொள்ள வசதியாக கலெக்டருக்கு வாக்கி-டாக்கி வழங்கப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் எண்ணப்பட்டன. இதேபோல் இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை 2-வது தளத்தில் நடந்தது.

முன்னதாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில் அறை கதவுகளின் ‘சீல்‘ அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங் கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் மொத்தம் 7 அறைகளிலும், தபால் வாக்குகள் தனியாக மற்றொரு அறையிலும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நடந்த ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 536 அலுவலர்கள் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் அறையில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வீதம் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. முகவர்கள் அவற்றை குறிப்பெடுத்து கொண்டனர். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அந்த விவரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகரித்தனர். அவ்வாறு சேகரித்த விவரங்களை சரிபார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மெகா கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு மேஜையின் அருகிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்தார். இதனால் தி.மு.க.வினர் உற்சாகமாக இருந்தனர்.

அதேநேரத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் இருகட்சிகளை சேர்ந்த முகவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பரபரப்பாக காணப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 7 துணை சூப்பிரண்டுகள் உள்பட மொத்தம் 786 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவுவாயிலில், கட்டிடத்தின் பிரதான வாசல் ஆகிய இடங்களில் பலத்த சோதனை செய்யப்பட்டது. வாக்கு எண்ணும் அறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story