கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி : அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக வீழ்ந்தார்
நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைந்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் தற்போதுதான் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. இவர் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருந்தார். கலபுரகி தொகுதி எம்.பி.யாக இருந்த மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் அத்தொகுதியில் களம் இறங்கினார்.
அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் போட்டியிட்டார். இவர் 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிஞ்சோலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். பின்னர் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்ததோடு, மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார்.
கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா வேட்பாளர் உமேஷ் ஜாதவ் வெற்றி பெற்றார். அவர் 95 ஆயிரத்து 168 வாக்குகள் வித்தியாசத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்தினார். இதனால் அரசியல் வாழ்க்கையில் முதல் தோல்வியை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்துள்ளார். அதாவது, இதுவரை 9 சட்டசபை தேர்தல்களிலும், 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று இருந்தார். 12-வது தேர்தலான இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அரசியலில் தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெயரை மல்லிகார்ஜுன கார்கே இழந்தார். இதுதான் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்த முதல் தோல்வி ஆகும்.
மல்லிகார்ஜூன கார்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்ப அரசியல் பார்க்கப்படுகிறது. அதாவது சித்தாபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், சமூக நலத்துறை மந்திரியாகவும் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்ளார். பிரியங்க் கார்கேவை விட மிக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலபுரகி மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் கூட மந்திரி பதவியை மல்லிகார்ஜுன கார்கே தனது மகன் பிரியங்க் கார்கேவுக்கு கட்சி மேலிடத்திடம் பேசி வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மல்லிகார்ஜுன கார்கே மீது அவருடைய ஆதரவாளர்களாகவும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களாகவும் இருந்த மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், உமேஷ் ஜாதவ் உள்ளிட்டவர்கள் அதிருப்தி அடைந்து பா.ஜனதாவில் சேர்ந்தனர். இந்த காரணங்கள் தான் மல்லிகார்ஜுன கார்கேவின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.