‘‘தி.மு.க. வெற்றி உண்மையானது அல்ல’’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


‘‘தி.மு.க. வெற்றி உண்மையானது அல்ல’’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 24 May 2019 8:27 PM GMT)

‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உண்மையானது அல்ல’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் மோடி ஆள வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆள வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளார்கள். அதற்கான பிரதிபலிப்புதான் இந்த தேர்தல் முடிவு. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம். அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்க தேவையான பலத்தை மக்கள் வழங்கிவிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கக்கூடிய வைர கிரீடம் தான், இந்த 9 தொகுதிகளின் வெற்றி.

தமிழக மக்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் வி‌ஷத்தை விதைத்து அதன் மூலமாக நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றியை அறுவடை செய்து இருக்கிறார்கள். பொய்யான பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி மக்களை நம்பக்கூடிய வகையில் கொண்டு சென்று, அதன் மூலமாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். எனவே தி.மு.க.வின் வெற்றி உண்மையான வெற்றி அல்ல.

இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சி அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த சில காலமாக அ.தி.மு.க. ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் புழுதிவாரித் தூற்றியதால், மக்கள் குழப்பம் அடைந்ததன் காரணமாகவும், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு வெற்றி பெறாது என்ற எண்ணத்திலும் நடுநிலையாளர்களின் வாக்குகளை தந்திரமாக கைப்பற்றி இருக்கிறார்கள். இது தான் அவர்களின் வெற்றிக்கு காரணம்.

தி.மு.க உண்மையாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்தியிருந்தால் சட்டமன்றத்தில் எப்படி நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும்? நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்ய கால அவகாசம் உள்ளது. அடுத்து வரும் தேர்தலில் இந்த பின்னடைவை படிக்கட்டாக பயன்படுத்தி வெற்றி பெறுவோம்.

அ.தி.மு.க.வை அழிப்போம் என்று கூறிய அனைவரும் அழிந்து விட்டார்கள். எங்களுக்கு போட்டி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை அடுத்த தேர்தலில் எப்படி ஓரம் கட்ட வேண்டும், பதம் பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இனி அ.ம.மு.க. ஒன்றுமில்லாமல் போய்விடும். அ.ம.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை உரிய அழுத்தம் கொடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெறுவார்கள். தி.மு.க. பெற்ற வெற்றியால் தமிழகத்திற்கு ஒரு லாபமும் கிடையாது. தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள் இப்போது யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி வெற்றியினால் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட லாபம் கிடையாது. அ.தி.மு.க. தமிழகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அ.தி.மு.க. வேகமாக செயல்படுவதற்கு இந்த தேர்தல் ஒரு பாடம்.

துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு, மத்திய மந்திரிசபையில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும்தான் முடிவு எடுப்பார்கள். கூட்டணியில் யாரையும் மந்திரியாக்கும் அளவிற்கு பா.ஜனதா பலவீனமாக இல்லை. அசுர பலம் பொருந்தியதாக உள்ளது.

நாங்கள் கேட்கும் திட்டங்களுக்கு பா.ஜனதா அரசு ஆதரவு அளிக்கும். மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது இந்த இடைத்தேர்தல் மூலமாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் என்றும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்–அமைச்சராக இருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story