கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்க பாடப் புத்தகங்கள் வந்தன


கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்க பாடப் புத்தகங்கள் வந்தன
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 7:30 PM GMT)

கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்தன. இதனை அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இலவச பாடநூல் புத்தகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து பெறப்பட்டு கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வினியோக வளாகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன. பின்னர் பணியாளர்கள் வேனி லிருந்து புத்தக பண்டல்களை ஒவ்வொன்றாக இறக்கி வளாக அறையில் அடுக்கி வைத்தனர். அரசு, அரசு உதவி பெறும் என கரூர் மாவட்டத்தில் உள்ள 146 பள்ளிகளுக்கு வழங்கும் வகையில் இலவச பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் பெறப்பட்டு இருக்கிறது.

அதிலும் இந்த ஆண்டு 7, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அந்த பாடப்புத்தகங்களை கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. அரசு தொடக்க பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளிலும் ஆர்வத்துடன் சிறுவர், சிறுமிகள் சேர்ந்து வருகின்றனர். அவர் களுக்கான வகுப்புகளை தொடங்குவதற்கும், வகுப்பறை ஒதுக்குவது, ஆசிரியர்களை பாடம் எடுக்க அறிவுறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை கல்வித்துறை யினர் செய்து வருகின்றனர்.

மேலும் 1-5, 6-8-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதனை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு நடக்கிறது. எனினும் கரூர் மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியானதாகவே இருக்கிறது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா கூடுதல் பொறுப்பாக கரூர் கல்வித்துறையை கண்காணித்து வருகிறார்.

எனவே கரூர் மாவட்டத்துக்க புதிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை விரைவில் நியமனம் செய்ய வேண்டும் என கல்வித்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி பள்ளிகள் திறந்ததும் அரசின் இலவச பாட புத்தகங்கள் உடனடியாக வினியோகம் செய்யப்படும் என கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். 

Next Story