ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் நாகை தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராசு பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் நாகை தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராசு பேட்டி
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 7:53 PM GMT)

நாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் என நாகை தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு கூறினார்.

திருவாரூர்,

காவிரி பாசன மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே அந்த திட்டத்தை செயல்படுத்துவதை அனுமதிக்க கூடாது என நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பயிர் காப்பீட்டு திட்டம் தனியாரிடம் விடப்பட்டுள்ளதால் முழுமையான அளவில் காப்பீட்டு தொகை கிடைக்காத நிலையை மாற்றி, பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க பாடுபடுவேன்.

சிறு துறைமுகங்கள்

சென்னையில் இருந்து புதுச்சேரி, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யவும், கோடியக்கரை-தஞ்சை வரையிலான 110 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தவும் பாடுபடுவேன். நாகை துறைமுகத்தை தரம் உயர்த்தவும், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் சிறு துறைமுகங்கள் அமைக்கவும், மீனவர்களுக்கென தனியாக அமைச்சகம் ஏற்படுத்திட முயற்சிப்பேன்.

இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்படும் காலங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை கிடைக்க பாடுபடுவேன். மேலும் திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் சேவையை தொடங்க பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story