அடிப்படை வசதிகள் இல்லாத புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பயணிகள் கடும் அவதி


அடிப்படை வசதிகள் இல்லாத புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதற்காக மூடப்பட்டது. இதற்காக புதுக்கோட்டை மகளிர் கல்லூரி எதிரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. புதிய பஸ் நிலைய பராமரிப்புகாக புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியிலிருந்து பஸ் நிற்கும் தரைத்தளம் மற்றும் ஓடுதளம், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிலையத்தின் இரு முகப்புகளிலும் 2 வளைவுகள், வர்ணம் பூசுதல், பயணிகள் அமரும் அறை, நடை பாதையில் டைல்ஸ், கைப்பிடிச்சுவர், மின்சார வசதி உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி திறக்கப்பட்டது.

வசதிகள் இல்லை

புதிய பஸ் நிலையத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் கழிவறையை பயன்படுத்தாமல் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால், சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

திருச்சி பஸ்கள் நிற்கும் மார்க்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், மதுரை, தஞ்சை பஸ்கள் நிற்கும் மார்க்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டன. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதாகி விட்டதால் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலையத்தின் 4 பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த குடிநீர் தொட்டிகளிலும் தற்போது தண்ணீர் நிரப்பப்படாததால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடைகளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இருசக்கர வாகன நிறுத்துமிடம்

இதேபோல, புதிய பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரை சுற்றி கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாய்க்கு மூடி இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்குகாக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் இருந்து இரு சக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆட்டோ நிறுத்துமிடம் அகற்றப்பட்டு, பஸ் நிலையத்தில் மேல்புறம் அமைக்கப்பட்டது.

இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தில் டவுன் பஸ்களை நிறுத்துவதற்கான புதிதாக 16 பஸ்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது டவுன் பஸ்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல பயணிகளுக்கு பஸ் நிலையத்தின் இருபுறங்களிலும் நிழற்கூடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது பஸ் நிலைய வளர்ச்சி பணிகள் நிறுத்தப்பட்டு, பஸ் நிலையத்தின் மேற்புறத்தில் செயல்பட்டு வந்த இரு சக்கர வாகன நிறுத்தும் இடம் டவுன் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

கோரிக்கை

இதனால், தற்போது டவுன் பஸ் நிலையத்தில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் விரைவில் டவுன் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது டவுன் பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகன நிறுத்தம் செயல்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பஸ் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மேலும் டவுன் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தைபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story