வயிற்றுப்போக்கால் உயிரிழப்பை தடுக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள்


வயிற்றுப்போக்கால் உயிரிழப்பை தடுக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள்
x
தினத்தந்தி 27 May 2019 10:45 PM GMT (Updated: 27 May 2019 9:04 PM GMT)

குமரி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பை தடுக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் இன்று முதல் வீடு, வீடாக சென்று மருந்து, மாத்திரைகளை வினியோகம் செய்கிறார்கள்.

நாகர்கோவில்,

இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் குழந்தைகள் வயிற்றுப்போக்கின் காரணமாக இறக்கின்றனர். எனவே, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி வரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று ஓ.ஆர்.எஸ். திரவம் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1,725 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீடு, வீடாக...

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளில், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளின் வீடுகளில் 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும், வயிற்றுப்போக்கு அல்லாத குழந்தைகளின் வீடுகளில் ஒரு ஓ.ஆர்.எஸ். பாக்கெட் வீதமும் வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், வயிற்றுப்போக்கின் போது 2 மாதம் முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகள் 14 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கினை விரைவாக குணப்படுத்தலாம். பிறந்த குழந்தை முதல் 2 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரை தேவைப்படாது.

இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஓ.ஆர்.எஸ்.திரவ பாக்கெட்டுகள் மற்றும் மாத்திரைகள் வழங்குவதோடு ஓ.ஆர்.எஸ். திரவம் கலக்கும் முறை, மாத்திரைகளின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story