மயிலம் அருகே, கார் கவிழ்ந்தது, தனியார் மருத்துவமனை ஊழியர் பலி - தாய் உள்பட 7 பேர் படுகாயம்
மயிலம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் மருத்துவமனை ஊழியர் பலியானார். தாய் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
மயிலம்,
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் மகன் சஞ்சய் பிரகாஷ்(வயது 22). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சஞ்சய்பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி சஞ்சய்பிரகாஷ் தனது தாய் சஜிதா(40), தம்பி இந்திரபிரகாஷ்(19), உறவினர் ராஜேந்திரன் மனைவி பிந்து(33), அவரது மகள் அபி(16), அவரது மகன் அட்சயதரன்(12), முத்து மகன் சுரேந்திரன்(22), ராமகிருஷ்ணன் மனைவி பார்கவி(70) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று மேல்மருவத்தூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்விட்டு மதியம் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காரை சஞ்சய்பிரகாஷ் ஓட்டினார்.
அந்த கார் மயிலம் அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. கூட்டேரிப்பட்டு சந்தைமேடு அருகே சென்றபோது, திடீரென ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். இதைபார்த்த சஞ்சய்பிரகாஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க தனது காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புக்கட்டை மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சய்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த சஜிதா உள்ளிட்ட 7 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் பலியான சஞ்சய் பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story