விவசாயிகள் நலனை பாதுகாக்க அனைத்து வகையான திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்


விவசாயிகள் நலனை பாதுகாக்க அனைத்து வகையான திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதி விவசாயிகள் நலனை பாதுகாக்க அனைத்து வகையான திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பூண்டி.கலைவாணன் நேற்று முன்தினம் சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார். கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஊர்குடி, அத்திசோழமங்கலம், காவனூர், திருமதிகுன்னம், அம்மையப்பன் உள்ளிட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த கருணாநிதி 2 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். திராவிட இயக்க கொள்கையின் மீது தீராத பற்று கொண்ட மக்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது.


அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடைய ஆதரவுடன் தி.மு.க. சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு மக்கள் பேராதரவு அளித்து வெற்றி பெற செய்துள்ளார்கள். என்னை வெற்றி பெறச்செய்த திருவாரூர் தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக என்றென்றும் விளங்குவேன். திருவாரூர் சட்டமன்ற தொகுதியை தமிழகத்திலேயே ஒரு முதன்மை தொகுதியாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.


தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், மக்கள் விடுத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தான் என்னுடைய முதலாவது பணியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய அனுமதியையும் ஆதரவையும் பெற்று மக்களுக்கான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைப்பேன். இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அனைத்து வகையான திட்டங்களையும் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், நகர செயலாளர் கலையரசன், தாழை.அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story