திருமருகல் பகுதியில் ஆமை வேகத்தில் தரைப்பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


திருமருகல் பகுதியில் ஆமை வேகத்தில் தரைப்பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 May 2019 10:30 PM GMT (Updated: 30 May 2019 7:06 PM GMT)

திருமருகல் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் தரைப்பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருமருகல்,

திருமருகல் பகுதியில் நாகை-கும்பகோணம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நாகை, காரைக்கால், திருவாரூர், சன்னாநல்லூர், நன்னிலம், கும்பகோணம், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களும், பள்ளி, கல்லூரி செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. மேலும் லாரிகள், கார்கள், ஆட்டோக்கள், சரக்கு வேன்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

அவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் குறுக்கே திருமருகல், சீயாத்தமங்கை, புத்தகரம், திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வாய்க்கால்களின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி பல மாதங்களாகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் தோண்டப்பட்ட பள்ளங் களில் விழுந்து விடுகின்றனர். இதனால் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இப்பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு தடுப்பு சாதனங்கள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளம் தோண்டிய மண் சாலையிலேயே கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் மண்ணில் சிக்கி சிரமப்படுகின்றன. அந்த இடத்தில் பாதையும் சிறிதாக உள்ளதால் வாகனங்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து, விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர்.

நடவடிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீயாத்தமங்கையில் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஆலத்தூரை சேர்ந்த 2 பேர் விழுந்து விபத்துக்குள்ளாயினர். ஆமை வேகனத்தில் நடைபெறும் தரைப்பாலங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, திருமருகல் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் தரைப்பாலங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story