தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான தேர்வு : 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது


தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான தேர்வு : 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
x
தினத்தந்தி 3 Jun 2019 10:49 AM GMT (Updated: 3 Jun 2019 10:49 AM GMT)

தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன் மூலம் 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அரசுப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக விளங்குகிறது. அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களை நிரப்ப ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ எனும் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்புகிறது. தற்போது 475 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணிவாரியாக உள்ள காலியிட விவரம் : அசிஸ்டன்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் -10, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (அக்ரி) - 93, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில்) - 193, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்) - 13, அசிஸ்டன்ட் டைரக்டர் (இண்டஸ்ட்ரியல் சேப்டி அண்ட் ஹெல்த்)- 26, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில்-ஹைவே) - 123, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில் மாரிடைம்) - 2, ஜூனியர் ஆர்கிடெக்ட்-15.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...

எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்சன், அக்ரி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அசிஸ்டன்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பணிக்கு 39 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதி களின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ. 200 செலுத்தி விண்ணப்பிக்கலாம். சில பிரிவினருக்கு இதில் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெறுகிறது. இவை பற்றிய கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story