உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் புதுவை கடற்கரையில் குப்பைகள் சேகரிப்பு
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு புதுவை கடற்கரையில் நேற்று கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரி,
ஜூன் 5–ந்தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஆகும். இந்த ஆண்டு பிளாஸ்டிக் கழிவு குறித்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, இந்திய கடலோர காவல்படை சார்பில் கடற்கரையில் நேற்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ–மாணவிகள், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 500 பேர் கலந்து கொண்டு கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர். இதில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே இருந்தது.
இதனை தொடர்ந்து கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த தூய்மை பணியின் போது நேற்று சுமார் 1 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இதனை நகராட்சி ஊழியர்கள் லாரிகள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு வீராம்பட்டினம் கடற்கரை, கனகன் ஏரி ஆகிய இடங்களிலும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் குப்பைகளை அப்புறப்படுத்து சுகாதார பணியில் ஈடுபட்டனர். இங்கிருந்து சுமார் 1½ டன் அளவுக்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன.