சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் மறியல்; 30 பேர் கைது
சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே கிள்ளையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இரு சக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஸ் பாபு முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பிரசாரம் தொடங்கியவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த பிரசாரத்திற்கு அனுமதியில்லை என்று தடைவிதித்தனர். இதில் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி போராடுவோம் என்று கூறி, கிள்ளை கடை தெருவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.