மங்களூரு அருகே துணிகரம் 3 கோவில்கள், 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை
மங்களூரு அருகே 3 கோவில்கள், 2 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
மங்களூரு,
மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சசிகித்லு பகுதியில் 3 கோவில்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் அர்ச்சகர்கள் கோவில்களை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் அந்த 3 கோவில்களின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அர்ச்சகர்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு கோவில்கள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முல்கி போலீசார் சம்பவம் நடந்த கோவில்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவம் நடந்த கோவில்களில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து கோவில்களில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர் கள் பதிவு செய்து கொண்டனர். மேலும் அவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த மோகன் சாலியான், அபு சாலி வீட்டிலும் திருட்டு நடந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கும் சென்று போலீசார் விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர்.
அதில் சில மர்மநபர்கள் கோவில்கள், வீடுகளில் திருடிவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த திருட்டுகளில் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஒரே இரவில் 3 கோவில்கள், 2 வீடுகளில் திருட்டு நடந்து உள்ளது மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story