ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி சாவு


ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார்.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி சரக்கு ரெயில்கள் மூலம் தினமும் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கரியை ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை ரெயில் பெட்டிகளில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணியில் மேட்டூரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி மூர்த்தி (வயது 39) உள்பட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பரிதாப சாவு

ஒரு பெட்டியில் நிலக்கரியை இறக்கிய மூர்த்தி, பின்னர் 2 பெட்டிகளை இணைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக 2 பெட்டிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் விரைந்து சென்று, மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story