தொழிலாளி கொன்று புதைப்பு, மேலும் சிலரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட முயன்ற உறவினர்கள் - போலீசார் சமரச பேச்சுவார்த்தை


தொழிலாளி கொன்று புதைப்பு, மேலும் சிலரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட முயன்ற உறவினர்கள் - போலீசார் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 Jun 2019 4:00 AM IST (Updated: 13 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே தொழிலாளி கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் உறவினர்கள் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

கம்பம்,

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவருடைய உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கருநாக்கமுத்தன்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த அஜீத்குமார் (23), பேச்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (23) ஆகிய 2 பேரும் சேர்ந்து மனோஜ்குமாரை கொன்று புதைத்தது தெரியவந்தது. அஜீத்குமார் வளர்த்த நாயை விஷம் வைத்து கொன்றதால் மனோஜ்குமாரை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி மனோஜ்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக வேன் மூலம் கம்பத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி தலைமையில் போலீசார் கம்பம் இரட்டை குழாய் சின்னவாய்க்கால் பகுதி அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் கொலை சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டு அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story