தடைக்காலம் இன்று நிறைவு: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்


தடைக்காலம் இன்று நிறைவு: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தடைக்காலத்தையொட்டி ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இழுவலை படகுகளும் கடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கடலில் சிறிது தொலைவு வரை சென்று மீன்பிடிக்கும் சிறியவகை பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வந்தனர். மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மராமத்து பணிகளை மேற்கொண்டனர்.

இதில் படகுகளுக்கு வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள சேதத்தை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அதேபோல ஐஸ் தொழிற்சாலைகளிலும் மராமத்து பணிகள் நடந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் நாகை மீனவர்கள் விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் ஏற்றுதல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட ஆயத்த பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

நாகையில் உள்ள ஐஸ் ெதாழிற்சாலைகளில் நேற்று ஐஸ் கட்டிகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ள நிலையிலும், நாகை கடுவையாற்றை தூர்வாராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் தற்போது வரை வழங்கப்படவில்லை.

தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை. அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும், புயலில் சேதம் அடைந்த அலை தடுப்பு சுவர்களை சீரமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

Next Story