திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய மாணவர் சங்கத்தினர் 8 பேர் கைது


திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய மாணவர் சங்கத்தினர் 8 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 3:45 AM IST (Updated: 14 Jun 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

அரசு அறிவித்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக தனியார் பள்ளிகள் அமல்படுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

முற்றுகையிட முயற்சி

அதன்படி நேற்று திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்னதாக உள்ள விளமல் கல்பாலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுர்ஜித் தலைமையில் மாணவர் அமைப்பினர் தஞ்சை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் கல்வி கட்டண கொள்கையை தடுக்க வேண்டும். அரசு பள்ளி உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவ அமைப்பினர் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்று வேனில் ஏற்றினர்.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுர்ஜித் உள்பட 8 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story