ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந் தேதி நடக்கிறது


ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:57 PM GMT)

மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வணிக சங்கம் சார்பில் ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வாரம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை தனியார் அமைப்புகளுடன் இணைந்து பிரமாண்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு செங்குந்தர் பள்ளிக்கூடத்தில் நடக்கிறது.

கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள்

முகாமுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசுகிறார். வேலைவாய்ப்பு முகாமை கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். முகாமையொட்டி நடைபெறும் ரத்ததான முகாமை கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு துணைத்தலைவர் பாலு என்கிற பி.தனபாலன், ஈரோடு செங்குந்தர் கல்விக்கழக செயலாளர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (பொது) சி.சுப்பிரமணியன் வரவேற்கிறார். சேலம் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஓ.செ.ஞானசேகரன் திட்டம் குறித்து பேசுகிறார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி டி.ஜோதி, சங்க ெபாருளாளர் சி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். முடிவில் பொதுச்செயலாளர் சி.பாலகிரு‌‌ஷ்ணன் நன்றி கூறுகிறார்.

2 ஆயிரம் பேர்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.பாலகிரு‌‌ஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் தொழில் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தொழில் கூடங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள் உள்பட அனைத்து துறைக்கும் பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். ஆனால், அவரவர் தேவைக்கு ஏற்ப வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. அந்த குறையை போக்க, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறோம். தற்போதைய தேவையின் அடிப்படையில் 2 ஆயிரம் பேர் வேலைக்கு தேவைப்படுகிறார்கள்.

ரூ.1½ லட்சம் சம்பளம்

மாதம் தோறும் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை சம்பளத்துக்கு ஆட்கள் வேண்டும். எனவே படித்தவர்கள், படிக்காதவர்கள், பல நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் மிக்கவர்கள், புதிதாக வேலை தேடுபவர்கள், டிரைவர்கள், லேத் பணியாளர்கள் என்று எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டால் வேலைவாய்ப்பு நிச்சயம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த முகாமில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள் இந்த முகாமில் காலை 8.30 மணிக்கே வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலை தேடி வருபவர்களின் கல்வித்தகுதி, திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு சிறந்த ஊதியம் தரும் நிறுவனத்தை அடையாளம் காட்டுவதற்கும், அவர்களுக்கு நேர்முகத்தேர்வு வரை முழுமையாக வழிகாட்டுவதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நிர்வாகிகள் ராஜேஸ், சின்னசாமி, ஜிப்ரி, மனோகர், தனசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story