அரசு துறைகள் கடன் வாங்கி இருந்தால் தாமதமின்றி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


அரசு துறைகள் கடன் வாங்கி இருந்தால் தாமதமின்றி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 7:38 PM GMT)

அரசு துறைகள் கடன் வாங்கி இருந்தால் தணிக்கை அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பட்ஜெட் தொடர்பாக துறைவாரியாக முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டங்களை நடத்தினார். இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியிருப்பதாவது:–

பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்–அமைச்சர் நடத்தியுள்ளார். இதன் மூலம் நிதி நிர்வாகத்தில் புதுச்சேரி மேம்படும்.

அனைத்து அரசுத்துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மானியமோ, கடனோ வாங்கி இருந்தால் அதற்கான தணிக்கை அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிக்கவேண்டும். பலர் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதே இல்லை.

2019–20ல் யாருக்கெல்லாம் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவை வாங்குவதற்கு தகுதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பலர் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் உள்ளிட்டவை சரியான நேரத்தில் கிடைக்காமல் கஷ்டப்படுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

தங்களுக்கான பணப்பலன்களுக்காக பலர் நீதி மன்றங்களில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். மேலும் வருங்கால வைப்புநிதியை மடைமாற்றமும் செய்யக்கூடாது. அப்போதுதான் அரசு மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ளார்.


Next Story