ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை மறுபரிசீலிக்க துணை குழு - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை மறுபரிசீலிக்க துணை குழு - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 8:27 PM GMT)

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை மறுபரிசீலிக்க துணை குழு அமைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வது என்று, கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.கே.பட்டீலும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் மாநில அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய மந்திரிசபை துணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவை முதல்-மந்திரி குமாரசாமி அமைப்பார். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

வனக்காவலர்கள் நியமனத்தில், ஆதிவாசிகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துமகூரு மாவட்டத்தில் உள்ள 72 கிலோ மீ்ட்டர் ஹேமாவதி அணை கால்வாயை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேதம் அடைந்த கிராமப்புற சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.311 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு இந்த மடிகணினி வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த மடிகணினி வழங்கப்படும். இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் 3,500 ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.


Next Story