மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:00 AM IST (Updated: 15 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம் கடலூர் கிளை மற்றும் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கடலூர் கிளை தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் டாக்டர் கேசவன் முன்னிலை வகித்தார். கொல்கத்தா மருத்துவமனையில் பணியில் இருந்த 2 டாக்டர்கள் மீது சமூகவிரோதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர்கள் கோமாநிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கைது செய்ய வேண்டும், இரவு பகலாக பணிபுரிந்து வரும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வசதியை செய்துதர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மருத்துவ சங்க சிதம்பரம் கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாரதிசெல்வன், பொருளாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்கள் மற்றும் சேவை சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதலை தடுக்க கடுமையான சட்டம் இயற்றக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் மணவாளன், பாரி, முத்துக்குமார், முதுநிலை மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அருட்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் குலோத்துங்கன், சாதிக் பாஷா, நவநீதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பின்னர் பணிக்கு சென்றனர்.

Next Story