ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி; 2 பேர் மாயம் கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது பரிதாபம்


ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி; 2 பேர் மாயம் கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:03 PM GMT)

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சிறுவன் ராட்சத அலையில் சிக்கி பலியானான். 2 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே புதூர் மீனவ கிராம கடற்கரையின் அருகில் ஒரு தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 14), ஆன்டோ ரக்‌ஷன் (11), சகாயரெஜின் (12), ரகீத் (13) உள்பட 10 சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினர்.

அப்போது, பந்து கடலுக்குள் விழுந்தது. இதை கண்ட சச்சின், ஆன்டோ ரக்‌ஷன் ஆகிய 2 பேரும் கடற்கரை பகுதிக்கு சென்று பந்தை எடுக்க முயன்றனர். அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை அவர்கள் 2 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் அபயக்குரல் எழுப்பினர்.

தங்கள் கண்ணெதிரே நண்பர்கள் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட சகாய ரெஜினும், ரகீத்தும் உடனே அவர்களை மீட்க கடலுக்கு சென்றனர். ஆனால், அடுத்தடுத்து வந்த ராட்சத அலை அவர்களையும் வாரிச் சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. கரையில் நின்ற சக சிறுவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர்.

சிறுவன் பலி

சிறுவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற மீனவர்கள் அங்கு ஓடி வந்தனர். சிறுவர்கள் கூறிய தகவலை கேட்டதும், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அலையில் சிக்கிய 4 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சச்சினையும், ஆன்டோ ரக்‌ஷனையும் மட்டுமே மீனவர்களால் மீட்க முடிந்தது. ஆனால் சகாய ரெஜினையும், ரகீத்தையும் மீட்க முடியவில்லை.

மீட்கப்பட்ட 2 பேரையும் மீனவர்கள் கரைபகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது சச்சின் பரிதாபமாக இறந்தான்.

ஆன்டோ ரக்‌ஷன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடனே, அவனை மண்டைக்காடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு

இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராட்சத அலை இழுத்து சென்ற சகாய ரெஜினையும், ரகீத்தையும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த புதூர் மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் கடற்கரையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story