நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி விஷால் தவறு செய்து விட்டார்


நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி விஷால் தவறு செய்து விட்டார்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஷால் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி தவறு செய்து விட்டார் என்று சுவாமி சங்கரதாஸ் அணி குற்றம் சாட்டி உள்ளது.

திருச்சி,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணியினரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் கூட்டத்தில் நடிகர் நாசர் பேசி ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில் நேற்று சுவாமி சங்கரதாஸ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது உதயா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜும், பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும் போட்டியிடுகிறார்கள். பாண்டவர் அணிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவரே ஐசரி கணேஷ் தான். விஷாலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் அந்த அணியை விட்டு வெளியேறி வந்து உள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம் என வாக்குறுதி அளித்த நடிகர் விஷால் 40 சதவீத பணிகளை தான் முடித்து உள்ளார். கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி அவர் தொடர்ந்து தவறுகளை செய்து வருகிறார்.

நாடக நடிகர் நலன்

விஷாலுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகமே உள்ளது. நலிந்த நாடக நடிகர்களுக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் நாடக நடிகர்களின் நலனிற்காக பாடுபடுவோம். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக நடிகர் நடிகைகளை வைத்து நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திட்டமிட்ட படி வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். பாண்டவர் அணியினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். பாக்கியராஜ் ஒரு நடிகரா என பேசி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story