ராமாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


ராமாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

ராமாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் 155–வது வார்டு மூகாம்பிகை நகரில் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் குறைந்து, குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் குறைந்ததற்கு அங்கு செயல்படும் தனியார் குடிநீர் கம்பெனியே காரணம் எனக்கூறி திடீரென ராமாபுரம், வள்ளுவர் சாலையில் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயலாநகர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் மாநகராட்சி வளசரவாக்கம் 11–வது மண்டல அதிகாரிகளை வரவழைத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

மூகாம்பிகை நகர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் தனியார் குடிநீர் கம்பெனியில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரை ராட்சத மோட்டார் மூலம் உறிஞ்சி விற்று வருகிறார்கள். இதனால் கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதியில் நிலத்தடிநீர் வற்றி குடிநீர் மட்டுமின்றி அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அந்த குடிநீர் கம்பெனியை மூடவேண்டும். எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story