சாத்தான்குளத்தில் வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு


சாத்தான்குளத்தில் வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

வக்கீலை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளத்தில் 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம்,

தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குகளை சரிவர விசாரிப்பதில்லை எனவும், வக்கீல்களை மதிக்க தவறுவதாகவும் சாத்தான்குளத்தை சேர்ந்த வக்கீல் ஜேசுதுரை என்பவர் உயர் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஒரு வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் சாத்தான்குளம் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற வக்கீல் ஜேசுதுரைக்கும், இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது இன்ஸ்பெக்டர், வக்கீலை மிரட்டியதாகவும் தெரிகிறது.

கோர்ட்டு புறக்கணிப்பு

இதனை கண்டித்தும், வக்கீலை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வக்கீல் சங்க தலைவர் ராம்சேகர் தலைமையில் வக்கீல் ஜேசுதுரை உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களிடம் நீதிபதி சரவணன், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படாததால் கோர்ட்டு புறக்கணிப்பை தொடர போவதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

2-வது நாளாக போராட்டம்

அதன்படி நேற்று 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் வக்கீல் சங்க தலைவர்கள் கல்யாண்குமார், ராம்சேகர், ஆரோன்டேவிட், பொருளாளர் முத்துலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story